திங்கள், 22 மே, 2017

வேகத்தடை

















அலை நுரை நீர் குமிழ் மேல்
நின்ற ஓர் துளி போல்
சாலையின் சந்தடியில்
ஒவ்வொரு வாகனமும்!

"எனக்கும் இதற்கும் தொடர்பில்லை"
என எல்லா பயணிகளின்
ஏகோபித்த புலம்பலில்
ஹார்ன் அலைவரிசை!

வகைவகையாய் உருப்பெற்ற
மகிழ்வுந்தும், விரைவுந்தும்,
பேருந்தும் புகை கக்க,
நகரப் பெருவீதியில்
அன்றாட அணிவகுப்பு!

அரை அங்குல ஆக்கிரமிப்பே
அயராத பேரிலக்காய்
இரண்டே சக்கரங்களில்
எத்துனை வித்தைகள்!

பறக்க முடியாமல் பிள்ளைகூட்டம்
பேருந்து கூண்டில்!
அங்கலாய்த்து அடங்காமல்
ஆம்புலன்ஸும் அணியில் சேர!

ஆட்டோ சிப்பாய்களின்
அனைத்து விதிமீறல்களும்
தோற்றுப் போய் தெரு நிறைய,
மனை சேரும் பரிதவிப்பின்
பாதை அடைப்பு போராட்டம்!

அரிதாய் பெற்ற அரைமணி போலும்...
அதுவும் சாலையில் கரைய,
காதலை முன் அனுப்பி
இதயத்தை பறக்க விட்டு,

சிக்னலை வெறித்து, கண்களால் விரைந்து,
முன்னேற முயன்ற யாரோ ஒருவரின் 
கைப்பேசியில்  கீதம்!
நாண நிறமுடுத்தியது அவர் புன்னகை!

எதிர்முனையில் என்ன  வார்த்தையோ என்னமோ!
வேகமாய் இறங்கியது வான்!
சத்தமெல்லாம் பாடலாக,
சட்டென குளிர்ந்தது காற்று!

நகரும் வாகனங்கள் நடுவே நின்றது மனம்!
இன்னும் சற்று நேரம் நீடிக்காதா நகர்வலம்

 - அனுராதா சாயிநாதன்
















கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக