பார்க்கும் பூக்களெல்லாம்
புகைப்படமாய் பறித்து தரும் புது
கருவியாய்,
முகப்புத்தக பரிமாறல்
விரல்நுனி விளையாட்டாக்கிய
விந்தையாய்,
தேனிசை கீதங்கள்
'யூ' குழாயில் தேடித்தரும்
தொலைக்காட்சியாய்,
திக்குதெரியா தேசத்தில்
தெருக்களின் திசைகாட்டும்
தேவதையாய்,
மருத்துவமனை வரவேற்பறையில்
மகனை மௌனமாக்கும்
மந்திரமாய்,
பருப்பு பண்டம் கணக்கெழுத
புதுக்கவிதை பதித்து வைக்க
பேனாவில்லா புத்தகமாய்,
காலையில் எழுப்பி அட்டவணை காட்டி
நிகழ்வுகளை நினைவூட்டும்
காரியதரிசியாய்,
இலவச இ - நூலகமாய்,
செலவின்றி அயல்தேச அளவளாவல்
அருளிடும் அற்புதமாய்,
சுடச்சுட செய்திகளை
சட்டென 'flash' களால் சொல்லி செல்லும்
செய்தித்தாளாய்,
பழம் நறுக்கி, பேய்கள் துரத்த ஓடி,
பறவையாகி பன்றிகள் கொன்று,
பல வாகனங்களில் பாய்ந்தோடி, என
பொழுது போகா நேரங்களில்
பிள்ளை பருவம் புதுப்பிக்கும்
பழந்தோழியாய்,
மின்னஞ்சல், மென்வலை, வங்கி கணக்குகள்
வேண்டிய வேளை, வேண்டிய இடத்தில்
வழங்கிடும் வரமாய்,
அவ்வப்போது யாரோடேனும்
உரையாடப்பயன்படும்
கைப்பேசியுமாயும் இருக்கும்
என் மெய்யில்
ஓர் உருப்பாயான
ஐ - போன் இல்லையெனில்
ஐம்புலனும் செயல் மறந்தால்
யார் கையில் யார் கருவி?
- அனுராதா சாயிநாதன்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக