செவ்வாய், 8 மே, 2012

செர்ரிப்பழ தோட்டத்தில் சில மாங்கன்றுகள்

















செர்ரிப்பழ தோட்டத்தில் சில மாங்கன்றுகள்
குயிலிசை கேளாத, வியர்வை வாசம் பாராத,
குளிர் பிரதேச குருத்துகள்!

கோபுரமும், தாமரையும் என்னவென கேட்டிடும்
மழலை மொட்டுக்கள்!

ஞகரம், ரகரம், ளகரம் வராமல்
அயலார்போல் அன்னை மொழி பேசும் அரும்புகள்!

தத்தம் பெயர்களின் தவறான உச்சரிப்பே சரியென பழகி 
பாரதியும், வள்ளுவனும் funny எனும் பிஞ்சுகள்!

ஒலி இன்றி தீபாவளியையும் 
ஒளி இன்றி கார்த்திகையையும்
எப்படி விவரிப்பேன் இவர்கட்கு நான்?

ஆல நிழல், மல்லி மணம்,
செவ்விளநீர், நுங்கு சுவை,
எதை சுட்டி மொழி பெயர்ப்பேன் 
எனக்கும் தெரியவில்லை!

வெளிநாட்டில், கலாச்சரம் கலவாத வெறும் மொழி கல்வி 
வேர்களை வெட்டி, கிளைகளை வளர்க்கும் 
வீண் முயற்சியோ என விழிக்கிறேன்!

இயலும் என்றே நம்பி முயல்கிறேன்!!!

-அனுராதா சாயிநாதன்


கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக